நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF NARENDRA MODI


Admin
நரேந்திர மோடி அவர்கள், குஜராத்தை சேர்ந்த முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார். தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநிலத் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, குஜராத் அரசியல் வரலாற்றில் நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதில், அதிக ஆர்வம் கொண்டவராக விளங்கிய அவர், மின்சாரம், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத்துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார். இவருடைய சாதனையைப் பாராட்டி, “இந்தியா டுடே” நாளிதழ், “இந்தியாவின் சிறந்த முதல்வர்” என்ற விருதை வழங்கி கௌரவித்தது. மேலும், குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு “இ-ரத்னா” விருதை வழங்கி கௌரவித்தது. நாட்டின் வளர்ச்சிக்கு அடிகோலும் நிர்வாகமே, எதிர்கால வளர்ச்சிக்கு அவசியமானது எனக் கூறியது மட்டுமல்லாமல், அதை செயல்படுத்தியும் காட்டிய நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF NARENDRA MODI Narend10

பிறப்பு: செப்டம்பர் 17, 1950

பிறப்பிடம்: வட்நகர், மேஹ்சானா மாவட்டம், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

நரேந்திர மோடி அவர்கள், 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்திலுள்ள “வட்நகர்” என்ற இடத்தில் ‘தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி என்பவருக்கும், ஹூராபேன்னுக்கும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு ஆறு சகோதரர்கள் உள்ளனர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய ஆரம்பக் கல்வியை ‘வட்நகரில்’ உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய நரேந்திர மோடி அவர்கள், பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுதே, ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்திவந்த தன்னுடைய தந்தைக்கு உதவிகள் பல செய்துவந்தார். தன்னுடைய எட்டு வயதிலேயெ, இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட ‘ஆர்.எஸ்.எஸ்’ என அழைக்கப்படும் ‘தேசிய தொண்டர் அணியில்’ உறுப்பினராக இணைந்த மோடி அவர்கள், அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்டவராக விளங்கினார். இதனால், குஜராத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

சிறுவயதிலேயே ‘ஆர்.எஸ்.எஸ்–இல்’ தன்னை இணைத்துக்கொண்ட மோடி அவர்கள், ‘அகில பாரதிய வித்யார்தி பரிஷத்’ என்னும் மாணவர் குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றிருந்தார். இந்தியாவில் நெருக்கடிநிலை அமலில் இருந்த பொழுது, போராட்டங்களில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட மோடி அவர்களுக்கு, பல அரசியல் தலைவர்களின் அறிமுகம் கிடைத்தது. மோடியின் அயராத உழைப்பும், தன்னலமற்ற ஈடுபாட்டையும் கண்ட பிற கட்சி தலைவர்கள் அவரை வெகுவாகப் பாராட்டினர். ‘ஆர்.எஸ்.எஸ்-இன்’ தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த அவர், பிறகு பாரதிய ஜனதாக் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்து, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச்செயலாளராக உயர்ந்தார்.

குறுகிய காலத்திற்குள், அத்வானியால் 1998 ஆம் ஆண்டு ‘குஜராத்’ மற்றும் ‘இமாசலப் பிரதேச’ தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மோடி அவர்கள், வெகு விரைவில், ‘இமாசலப் பிரதேசம்’, ‘பஞ்சாப்’, ‘ஹரியானா’, ‘சண்டிகர்’, மற்றும் ‘ஜம்மு காஷ்மீர்’ போன்ற ஐந்து மாநிலங்களுக்கு, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998 ஆம் ஆண்டு ‘அடல் பிகாரி வாஜ்பாய்’ பிரதமராகப் பதவியேற்றபொழுது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவி வழங்கப்பட்டது.

குஜராத் முதல்வராக மோடி

தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலும் திறம்படச் செயல்பட்ட மோடி அவர்கள், 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி, குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7 ஆம் தேதி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார். பின்னர், இடைத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற அவர், பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு நடந்த “கோத்ரா ரயில் எரிப்புச்” சம்பவத்தைத் தொடர்ந்து, தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இருந்தாலும், அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பின்னர், 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று, மூன்றாவது முறையாக குஜராத் முதல்வர் பதவியை அலங்கரித்தார். இதனால், குஜராத் அரசியல் வரலாற்றில், நீண்டகால முதல்வராக இருந்தவர் என்ற சாதனையைப் பெற்றார். அதோடு நின்று விடாமல், நரேந்த மோடியின் அரசு மேற்கொண்ட பல்வேறு நலத்திட்டங்களினால், குஜராத் மக்கள் அனைவரும் பலன் அடைந்துள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் மாநிலத் தேர்தலில் நான்காவது முறையாக வெற்றிபெற்று, இந்திய அரசியலில் மாபெரும் சாதனைப் படைத்தார்.

முதல்வராக மோடியின் சாதனைகள்

பல எதிர்ப்புகள் இருந்தாலும், மாநிலத்தின் வளர்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட மோடி அவர்கள், சோலார் மின் உற்பத்தியினை அதிகப்படுத்தி குஜராத்தை மின் மிகை மாநிலமாக மாற்றினார். இளைஞர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தவிர்க்க, “குட்கா” என்னும் போதைப்பொருளுக்குத் தடை விதித்தார். மும்பைத் தாக்குதலுக்குப் பின், குஜராத் கடலோர பாதுகாப்பைப் பன்மடங்கு பலப்படுத்தினார். மேலும், தண்ணீர், சாலை வசதிகள், பெண் கல்வி, ஆரோக்கியம், ஊழலற்ற நிர்வாகம், விவசாயம், தொழில் வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி, குஜராத் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாற்றிக்காட்டினார்.

விருதுகளும், மரியாதைகளும்

2006 – ‘’இந்தியா டுடே’ நாளிதழ் இந்தியாவின் ‘சிறந்த முதல்வர்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தது.

குஜராத் கணினித்துறையில் இவர் ஏற்படுத்திய வளர்ச்சிக்காக ‘கம்ப்யூட்டர் சொசைட்டி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ‘இ-ரத்னா’ விருதை வழங்கி கௌரவித்தது.

2009 – ஆசியாவின் சிறந்த ‘எப்.டி.ஐ பெர்சனாலிட்டி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2012 – ‘டைம்’ பத்திரிகையின் முதல் அட்டையில் இந்தியாவின் ‘சிறந்த அரசியல்வாதிகளில்’ ஒருவராக சித்தரிக்கப்பட்டார்.

நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் அரசாங்கம், சிறந்த நிர்வாகத்திற்கான உதாரணம் என அமெரிக்கா புகழாரம் சூட்டியுள்ளது.

‘ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படைத் தேவை பொருளாதார சுதந்திரம்தான், இது இல்லாவிட்டால், பூரண சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ஒரு போதும் சொல்ல முடியாது’ என்பது பொருளாதார ஆய்வாளர்களின் கருத்து ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு, குஜராத் மாநிலம் பல துறைகளில் வளர்ச்சிக் கண்டு, மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்றால், மோடியின் அரசியில் ஆளுமை தான் அதற்கு முக்கிய காரணம். மேலும், அவர், மக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களை நடைமுறைப்படுத்தி, தனது நடவடிக்கையாலும், செயல் திட்டங்களாலும் நிரூபித்துக் காட்டி, மற்ற தலைவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES