'மைசூர் சிங்கம்' திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF TIPU SULTAN


Admin
1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

'மைசூர் சிங்கம்' திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF TIPU SULTAN Tipu210

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES