'கணித மேதை' இராமனுஜன் வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF RAMANUJAN


Admin
உலகில் ஐ.டி துறை சார்ந்த எந்த ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டாலும் அதில் இராமனுஜன் உருவாக்கிய எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (‡Number Theory) கொண்டு உருவாக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் நாம் பயன்படுத்தும் ஏ.டி.எம் சென்டர்கள் இயங்கி வருகின்றன.

'கணித மேதை' இராமனுஜன் வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF RAMANUJAN Rama10

1887-ஆம் ஆண்டு ஈரோட்டில் தன் தாயார் வீட்டில் பிறந்த இராமனுஜன் அதன் பிறகு தனது தந்தை ஊரான கும்பகோணத்தில் தனது பள்ளிப்படிப்பை படிக்க தொடங்கினார். இராமனுஜத்தின் தந்தைக்கு ஒரு ஜவுளிக் கடையில் குமாஸ்தா வேலை. தாய் கோமளம் சாரங்கபணி கோயிலில் பஜனைப் பாட்டு பாடுபவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இராமனுஜம் படிப்பில் மிகவும் சுட்டி.

கும்பகோணம் நகர உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது, தனது 13-ஆம் வயதில் லோனி எழுதிய, ‘முன்னேறிய முக்கோணவியல்’ (Advanced Trignomentry) என்ற நூலை முழுவதுமாகப் படித்து முடித்திருந்தார். பிறகு புதிய தேற்றங்களை உருவாக்கிக் காண்பித்து ஆசிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மெட்ரிக்குலேஷன் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்ற பிறகு, கும்பகோணம் அரசுக் கல்லூரியில் F. A. சேர்ந்தார். பள்ளியில் படிக்கும்போதே கணிதத்தில் மட்டுமே அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால், கல்லூரியில் மற்ற பாடங்களில் கவனம் செலுத்த முடியாமால் போனது. கணிதத்தைத் தவிர மற்ற எல்லா பாடங்களிலும் தோல்வி அடைந்தார். கணக்கில் மட்டும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்திருந்தார்.

அதையடுத்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அங்கும் தனது கணிதப் புலமையை வெளிபடுத்திய இராமனுஜன் மற்ற பாடங்களில் தேர்ச்சி பெறாமலேயே கல்லூரியை விட்டு வெளியேறினார்.

அதன் பிறகு தன்னுடைய 23 வயதில் ஜானகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். சொந்த முயற்சியில் கணித ஆராய்ச்சிகளில் இரவு, பகலாக ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். வறுமை ஒரு பக்கம் வாட்டி எடுக்க, மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு, தனி வகுப்புகள் எடுத்து குடும்பச் செலவுகளை ஓரளவு சமாளித்தார்.

அதன் பிறகு, தான் உருவாக்கிய தேற்றங்களை சென்னையில் பல அதிகாரிகளிடம் காட்டி, வேலை கேட்டுள்ளார். இராமனுஜத்தின் கணித அறிவைப் பாராட்டிய அவர்கள் வேலை கொடுக்க முன்வரவில்லை. பின்னர் நெல்லூர் ஆட்சியராக இருந்த ராமச்சந்திரராவ் என்பவரின் உதவியால் சென்னைத் துறைமுகத்தில் எழுத்தர் வேலை கிடைத்தது. அங்கு எழுத்தராக தனது பணிகளுக்கு இடையில் தனது கணித ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தேற்றங்களை வெளிநாடுகளுக்கு உள்ள பல்கலைக்கழங்களுக்கு அனுப்பி வைத்துக்கொண்டே இருந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாகப் பணிபுரிந்த ஹார்டி என்பவரை இராமனுஜத்தின் முடிவில்லா தொடர் (Infinite series) என்ற தேற்றம் கவர்ந்தது.

உடனே இராமனுஜத்தை இங்கிலாந்து வந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபடும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், இராமனுஜன், அம்மாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு இங்கிலாந்து செல்ல மறுத்து விட்டார். பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இங்கிலாந்து சென்று ஹார்டியுடன் இணைந்து கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

ஐந்து வருடங்கள் ஆய்வுகள் மேற்கொண்டு லண்டன் கணிதப் பருவ இதழில் இராமனுஜத்தின் ஆய்வு வெளியிடப்பட்டது. இவரது இந்த ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பி.ஏ. பட்டம் வழங்கப்பட்டது. அதன் பிறகு லண்டன் ராயல் கழகத்தின் ஆய்வாளராகவும், கேம்பிரிட்ஜ் ட்ரினிடி கல்லூரியின் முதல் இந்திய ஆய்வாளராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.

இங்கிலாந்தில் இருந்தபோது, முதல் உலகப் போரின் காரணமாக உணவு முறை மாற்றத்தினால் காசநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, 1919-ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். அதன் பிறகு, நோயின் தாக்கத்தினால் தனது 32-ஆம் வயதில் மறைந்தார். உலகில் இன்னும் இராமனுஜன் உருவாக்கிய தேற்றங்கள் குறித்து ஆராய்ச்சிகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. விடைகள் மட்டும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES