அலைபேசி உருவான வரலாறு : THE HISTORY OF CELLPHONE


Admin
கண்டுபிடிப்பு

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் கண்டுபிடிப்பான தொலைபேசிக்குப் பின்னர் 1906-ஆம் ஆண்டில் சார்லஸ் ஈ அல்டன் என்பவர் முதன் முதலில் வெஸ்ட் பாக்கெட் எனும் அலைபேசி சாதனத்தைக் கண்டுபிடித்தார். அதுவே அப்போதைய அலைபேசி வளர்ச்சியின் ஆரம்பமாய் அமைந்தது. இருப்பினும் சார்லஸ் ஈ அல்டனினால் பெரிய அளவில் அவருடைய கண்டு பிடிப்பை வளர்ச்சி பெறச் செய்ய முடியவில்லை.

இதன் பின்னர் 1946-ஆம் ஆண்டளவில் சிக்காகோவிலிருந்து பெல் சிஸ்டம் தொலைபேசி ஊடாக நடமாடும் ஒரு அலைபேசியில் இருந்து பரிசோதனை அழைப்பு, அதுவும் காரிலிருந்து ஏற்படுத்தப்பட்டது. அப்போது பயன்படுத்தப்பட்ட அலைபேசியின் எடை 36 கி.கி. ஆகும். கணினி போலவே அலைபேசியும் பெரியனவாக இருந்தே சிறியதாகியிருக்கின்றன. 1956-ஆம் ஆண்டு நதஅ எரிக்ஸன் என்ற மிகப்பெரிய வடிவிலான அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் எடை மிக அதிகமாக இருந்திருக்கிறது. இந்த போன் முதன்முதலில் ஸ்வீடன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டபொழுது 1956 முதல் 1967 வரை வெறும் 125 பயனாளர்கள்தான் இருந்திருக்கிறார்கள்.

கையடக்க அலைபேசி

அதன் பின்னர் இதன் ஈர்ப்பு மிக மெதுவாக அதிகரிக்க 1973-ஆம் ஆண்டில் ஜோன் எப் மிட்சல் என்பரால் கையடக்கமான முதலாவது அலைபேசி தயாரிக்கப்பட்டது. அப்போதிருந்துதான் அலைபேசிகளின் பரிணாம வளர்ச்சி ஆரம்பமானது.

அந்த வளர்ச்சியின் அடுத்த கட்டமாக 1973-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி மோட்டோரோலா நிறுவனத்தின் ஆய்வுக் கூடத்திலிருந்த ஜோயலுக்கு கூப்பர் என்பவர் முதலாவது அழைப்பினை ஏற்படுத்தினார். அதுவே ஏனையோரும் அலைபேசியின் அழைப்புக்குச் செவி மடுக்க வைக்க போடப்பட்ட அடித்தளமாக அமைந்தது எனலாம். இந்த அலைபேசி அன்று அமெரிக்க டாலர் 3995-க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.

முதன் முதலாக வணிக ரீதியிலான அலைபேசிகள் என்.ரீ.ரீ எனும் ஜப்பான் நிறுவனத்தால் 1979-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் தொடர்ந்து பல நிறுவனங்கள் அலைபேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்தன.

1983-ஆம் ஆண்டில் டாக்டர் மார்டின் கூப்பர் 2500 பவுண்ட் விலையில் முதன் முதலாக மோட்டோரோலா டைனா ஏ.டி.சி 800 எக்ஸ் என்னும் செங்கல் அளவில் அலைபேசியை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெரும் செல்வந்தர்களின் சொகுசு சாதனமாகவே அலைபேசி இருந்து வந்துள்ளது.

அலைபேசி நிறுவனங்கள்

செங்கல் போன்ற வடிவிலான அலைபேசியில் இருந்து, மோட்டோரோலா நிறுவனத்தால்தான் சற்றே சிறிய வடிவிலான அலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் 1989-ஆம் ஆண்டில் மாறுதல் பெற்று 1994-ஆம் ஆண்டில் மீண்டும் மோட்டோரோலா நிறுவனத்தால் வடிவத்திலும், தொழில்நுட்பத்திலும் மாறுதல் பெற்றிருக்கிறது. ஆனால் 1980-களில் இம்மாதிரியான அலைபேசிகளை "கார் போன்கள்' என அழைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து 1997-ஆம் ஆண்டில் நோக்கியா அலைபேசி நிறுவனம் அடித்தளம் அமைத்துள்ளது. 2002-ஆம் ஆண்டில் ப்ளாக் பெர்ரி, 2007-களில் ஆப்பிள் ஐபோன் எனத் தொடர்ந்து பல நிறுவனங்கள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு அலைபேசிக்கு நவீன பாதையமைத்து கொண்டு வந்தன. இவைகளே இன்றைய நவீன ஸ்மார்ட் போன்கள் என்று அழைக்கப்படுகின்றன.

நமது பார்வையில் அலைபேசி

உலக வரலாற்றில் வெற்றி பெறும் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் பழையனவாய் மாறியே முழுமையான அங்கீகாரத்தினை பெறுகின்றன. அந்த ஆய்வு வரிசையில் அலைபேசிக்குத் தனி இடம் உண்டு. ஏனெனில் அலைபேசிகள் வரவிற்கு ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் பரவலான எதிர்ப்புகள் இருந்து கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் அதன் தேவையைக் கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றார்கள்.

இவ்வாறு அன்று உருவான அலைபேசிகள் இவ்வருட இறுதியில் உலக மக்கள்தொகையை விஞ்சும் வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக ஆய்வுகளின் முடிவுகளிலிருந்து ஐக்கிய நாடுகளின் தொடர்பாடல்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இறுதியாக!

அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம் ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்குத் தகவல்களை எளிமையாகவும், உடனுக்குடன் கொண்டு சேர்க்க மிகவும் அருமையான நவீன தொழில்நுட்பக் கருவியாக இருக்கிறது என்பதே. இன்றைக்கும் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ அசம்பாவிதங்களைத் தடுப்பதற்குப் பயனுள்ள சேவையாக அலைபேசி இருந்து வருகிறது. அதை நாம் எப்படிப்பட்ட நோக்கத்திற்காகப் பயன்படுத்துகிறோம் என்பது பயன்படுத்துவோரின் மனநிலையைப் பொறுத்து இருக்கிறது. இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நமக்குக் கிடைத்துள்ள அலைபேசி என்னும் அற்புதமான ஆயுதத்தை ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கத்தைச் சரியாக நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை உணர்த்தும்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES