நாஸ்டர்டாமஸ் வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF NOSTRADAMUS


Admin
இந்தியர்களில் சித்தர்களும் ரிஷிகளும் சோதிட நிபுணர்களும் வருங்காலத்தைக் கணித்து வைத்ததைப் போலவே மேல்நாட்டினரும் கணித்திருந்தனர். அவர்களில் மிகவும் புராதனமானவர் இம்ஹோட்டெப் (Imhotep). இவர் நாலாயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் தோன்றியவர். எகிப்தியப் பேரரசன் ஜோஸரின் மதிமந்திரி; பொறியியல் வல்லுனர்; மருத்துவ நிபுணர்; சோதிட ஞானி. இப்படிப்பட்ட பேரறிஞர்தான் அவர்.

பெரும்பெரும் கற்களைக்கொண்டு பிரம்மாண்டமான பிரமிடுகளைக் கட்டும் முறையைக் கண்டுபிடித்தவர். தம்முடைய மருத்துவ ஆற்றலால் பெரும் வியாதிகளை நீக்கியவர். இறப்புக்குப் பின் மீண்டும் உயிர் பெறக்கூடிய ரகசியத்தை அறிந்தவர். இறந்தபின் உடலை பதனப்படுத்திப் பாதுக்காத்துவைக்கும் விதத்தைக் கண்டுபிடித்தவர். பிரமிடுகளும் அவற்றுள் வைக்கப்பட்ட மம்மி(Mummy) எனப்படும் சடலங்களும் இவருடைய ஆற்றலின் விளைவுகளே.

இவருடைய காலத்துக்குப் பின்னர் இவரை வைத்திய சாத்திரத்துக்கு அதிதேவனாக எகிப்தியர்கள் கொண்டாடினர். மெம்·பிஸ் என்னும் நகரில் அவருடைய கோயில் விளங்கியது. அவருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த கிரேக்கர்கள் அவரை ஐஸ்குலாப்பியஸ்(Aesculapius) என்ற பெயரில் மருத்துவக்கலையின் தேவனாக வணங்கினர். ஒரு பாம்பு சுற்றிக்கொண்டிருக்கும் தண்டே அவருடைய சின்னமாகும். இப்போதும் மருத்துவக்கலையின் சின்னமாக அது விளங்குகின்றது.

மேலைநாட்டு தீர்க்கதரிசிகளில் மிகவும் பிரபலமானவர் 'மிஷெல் தெநாத்ருதாம்'(Michel de Notredame).ஆங்கிலத்தில் நாஸ்ட்ரடாமஸ் (Nostradamus) என்று கூறுவார்கள். வருங்காலத்தைப் பற்றி அவர் எழுதிவைத்தவற்றில் பல நிகழ்ச்சிகள் நடந்துவிட்டிருக்கின்றன. சில நிகழ்ச்சிகளின் துவக்கம் ஏற்பட்டிருக்கிறது. சில நிகழ்ச்சிகள், சில வாரங்களிலோ சில மாதங்களிலோ உருவாகக்கூடும். தீராத நோய்களைத் தீர்த்தவர்.

யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?

நாஸ்டர்டாமஸ் வாழ்க்கை வரலாறு - LIFE HISTORY OF NOSTRADAMUS 7nostradamus_by_lemud

இவர் ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். இவருடைய மூதாதையர் யூதர்கள். இவருடைய பாட்டனார்களிடம் எபிரேய மொழியும் சோதிடமும் 'கபாலா'(Kabbala) எனப்படு யூத மர்ம சாஸ்திரமும் கற்றார். அதன் பின்னர் மருத்துவக்கல்வி பயின்று டாக்டர் ஆனார். அக்காலத்திய சமய சித்தாந்தங்களையும் தெளிவாகக் கற்றார். அவ்வமயம் பரவியிருந்த பிளேக் நோயை ஏதோ ஒரு ரகசிய முறையைப் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தார். மற்றவர்களால் குணப்படுத்தமுடியாத பலவியாதிகளையும் அவராலே தீர்க்க முடிந்தது. பிறகு யாருக்குமே தெரியாமல் ரசவாத வித்தை, மந்திரவாதம், திரிகால ஞான வித்தை முதலியவற்றையும் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகளில் மருத்துவத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றார். பல காரணங்களால் அவர் ஒரு நாடோடியாக விளங்கினார்.

ஸ்காலிஜர் என்னும் இன்னொரு ஞானியிடம் மேலும் பல மர்ம சாஸ்திரங்களின் நுணுக்கங்களை அறிந்துகொண்டார். அக்காலத்தில் கத்தோலிக்க சமயத்தில் இன்க்விஸிஷன்(Inquisition) எனப்படும் சமயச்சீரமைப்பு நடைபெற்று வந்தது. சமயத்தினுள் புகுந்துவிட்ட பலவகையான கோட்பாடுகளையும் பகுத்தறிவு வாதத்தையும் ஆராய்ச்சிகளையும் நீக்குவதற்கு மிகக்கடுமையான விசாரணைகளையும், சித்திரவதைகளையும், தண்டனைகளையும் சமய அதிகாரிகள் கடைபிடித்துவந்தனர். நாஸ்ட்ரடாமஸின் ரகசிய மருத்துவ முறைகள், சோதிடஞானம், மந்திர வாதம் முதலியவைகள் அந்த கத்தோலிக்க சமய அதிகாரிகளை ஈர்த்திருந்தன. ஆகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 'இன்குவிஸிஷன்' விசாரணையில் கடுமையான சித்திரவதைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். பலவகையான சித்திரவதைகளுக்குப் பின்னர், விசாரிக்கப்பட்டவர் விசாரணையின் முடிவில் - உயிரோடு இருந்தால் - பெரும்பாலும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்படுவார்.

கலீலியோவுக்கு நெருக்குதல்:

பூமியைத்தான் சூரியனும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்றே அக்காலத்திய ஐரோப்பியர்கள் நம்பி வந்தனர். சூரியனைத்தான் பூமியும் மற்ற கிரகங்களும் சுற்றி வருகின்றன என்று கண்டு பிடித்தவர் கலீலியோ(Galileo). இவரையும் இன்குவிஸாஷனுக்கு அழைத்தனர். சித்திரவதைக்குப் பயன்படுத்தப்படும் சில கருவிகளை கலீலியோவிடம் காட்டினர். மிகவும் முதுமைப் பிராயத்தில் தளர்வுற்றிருந்த கலீலியோ, 'முதுமையினாலேயே சாவதுதான் சாலச்சிறந்தது', என முடிவெடுத்தார்.

அவருக்கு நெருப்பு, வெப்பம், காயவைத்த இரும்புக்குறடு, நகத்தில் செலுத்தும் ஊசி போன்ற விவகாரங்கள் எல்லாம் அவ்வளவாக ஒத்துவாராத சங்கதிகள். ஆகவே பூமியைச் சுற்றிதான் எல்லாமே சுற்றி வருகின்றன என்று பைபிளின்மீது கையை வைத்துச் சத்தியம் செய்து கொடுத்து, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார் கலீலியோ!

இன்குவிஸாஷன்காரர்களுக்கு வீண் சிரமம் கொடுப்பானேன் என்று கருதிய நாஸ்ட்ரடாமஸ் அந்த இடத்தையே விட்டு ஓடிப்போனார். ஆறாண்டுகள் பரதேசியாக அலைந்த பின்னர் தென் பிரான்ஸின் ஸோலோன் நகரில் குடியேறிக் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமாக விளங்கலாயினார்.

பிஹ்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளைக் கண்டறியும் சக்தி அவருக்கு எப்படி ஏற்பட்டது என்று அவர் ஏதும் குறிப்பு எழுதிவைக்க வில்லை. ஒருமுறை ஒரு சிறு கிராமத்திலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த இளம் சன்னியாசி ஒருவரைக் கண்டார். உடனே அவர் இருந்த இடத்திற்குச்சென்று தொப்பியைக் கழற்றிவிட்டும் மண்டியிட்டு அந்த சன்னியாசியின் அங்கியின் நுனியை எடுத்து வணக்கத்துடன் முத்தமிட்டார். ஒன்றுமறியாத சன்னியாசி காரணம் கேட்டதற்கு அவர் பிற்காலத்து போப் ஆண்டவருக்குத் தம் வணக்கத்தைத் தெரிவித்ததாகக் கூறினார்.

1551-ஆம் ஆண்டில் நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளைப் பற்றிய சோதிடக் கணிப்புகளை 1550-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார். அவர் கூறியபடி அத்தனை நிகழ்ச்சிகளுமே நடந்துவிட்டன. ஆகவே அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொருஆண்டும் சொந்தமாகப் பஞ்சாங்கம் தயாரித்து வெளியிடலானார்.

இச்சமயத்தில்தான் உலகின் வருங்காலத்தைப் பற்றி ஆராயலானார். ஈராண்டுகள் மிகவும் பிரயாசைப்பட்டு கி.பி.1553-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 3797-ஆம் ஆண்டுவரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளச் சுலோகங்களாக இயற்றிவைத்தார்.

ஹென்றி மன்னனுக்கு மரண ஆரூடம்:

அப்போது பிரான்ஸை ஆண்டவர் இரண்டாம் ஹென்றி மன்னர். அவர் எப்போது எப்படி இறப்பார் என்று முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ் தம்முடைய சுலோகத்தில் கூறியிருந்தார். அதன்படி ஒரு வீர விளையாட்டின்போது அவர் இறந்தார். அப்போது அவர் அணிந்திருந்த பொன்னாலான முகக்கவசத்திலுள்ள துவாரத்தின் வழியாக போட்டியாளரின் ஈட்டி நுழைந்து அவருடைய கண்ணில் பாய்ந்து மூளைக்குச் சென்று முனை முறிந்து விட்டது. கவசத்தையும் கழற்றமுடியாமல் ஈட்டி முனையையும் எடுக்க முடியாமல் ஹென்றி துடிதுடித்து இறந்தார்.

இதையெல்லாம் முன்கூட்டியே அறிவித்த நாஸ்ட்ரடாமஸின் சுலோகங்களால் கவரப்பட்டாள் பிரெஞ்சுப் பேரரசி, கேத்தரின் டி மெடிச்சி. ஸொலோன் நகரத்துக்கு தானே நேரில் சென்று நாஸ்ட்ரடாமஸைக் கேத்தரின் சந்தித்தார். 45 நாட்கள் மந்திரிகம், ஆவிகளின் தொடர்பு, வானநூல் போன்ற முறைகளைக் கடைபிடித்து வருங்கால நிகழ்ச்சிகளை ஒரு கண்ணாடியின் மூலம் பேரரசியைக் காணவைத்தார்.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.

கறுப்பா, வெள்ளையா?

ஒருமுறை ஒரு பெரிய பிரபுவின் வீட்ட்க்கு விருந்துக்குச் சென்றார். அவருடைய அரண்மனையின் பின்புறம் ஓரிடத்தில் இரண்டு பன்றிகள் இருந்தன. ஒன்று கறுப்பு; இன்னொன்று வெள்ளை. அவற்றைக் காட்டி, "இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம்?", என்று அந்தப் பிரபு நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் சாப்பிட்டுவிடும்," என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

"என்னுடைய அரண்மனை எல்லைக்குள் எங்கிருந்து ஐயா, ஓநாய் வரும்?" என்று எள்ளி நகையாடினார், பிரபு.

அதன் பிறகு நாஸ்ட்ரடாமஸுக்கே தெரியாமல் சமையற்காரரை அழைத்து அந்த வெள்ளைப் பன்றியைக் கொன்று சமைக்கச் சொல்லிவிட்டுப் போனார் அந்தப பிரபு.

அன்றிரவு விருந்தில் பன்றிக்கறி பரிமாறப்பட்டு உண்டுமுடிந்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸை வினவினார்.

"நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?"

"கறுப்பு" என்று சற்றும் சளைக்காமல் கூறினார் நாஸ்ட்ரடாமஸ்.

உடனே அப்பிரபு, சமையற்காரரை அழைத்து, விருந்தினர் முன்னிலையில் விசாரித்தார்.

"எந்தப் பன்றியைப் பரிமாறியிருக்கிறாய், என்று இவர்கள் எல்லாரிடமும் சொல்"

"கறுப்புப்பன்றி"

பிரபு அதிர்ந்து போனார்.

"வெள்ளைப் பன்றியை அல்லவா சமைக்கச் சொன்னேன்? என் கண் முன்னால்தானே அதைக் கொன்றாய்?"

"ஆம்! பிரபோ. ஆனால் அடுப்பில் வைத்திருந்த பன்றியை உங்கள் வேட்டை நாய் கெளவி இழுத்துச்சென்று விட்டது. ஆகையால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்", என்று கூறினார் சமையற்காரர். அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு வளர்ப்பு ஓநாய்க்குப் பிறந்தது.

நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.

மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது. நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.

சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவரில் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது. உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.

சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸுக்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தெரிந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

"புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.

அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

நாஸ்ட்ரடாமஸ் தம்முடைய வாழ்நாளில் எழுதிய மொத்த ஜோதிடக் கவிதைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் கைக்குக் கிடைத்தவை அவற்றில் ஒரு பகுதிதான்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES