தமிழக அரசிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்ற கிராமம்! மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் மக்கள் இணைந்து வாழும் கிராமமாகத் தேர்வு செய்யப்பட்ட திருப்புல்லாணி வேளானூர் கிராமத்துக்கு தமிழக அரசின் பரிசாக ரூ.10 லட்சம் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் தீண்டாமை கடைப் பிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கிராமம் இவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது. இதற்கென ஒவ்வொரு வருவாய் கோட்டங்களில் இருந்து தலா ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் மாவட்ட அளவில் உள்ள இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் அதில் ஒரு கிராமம் ஊக்கப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்படுகிறது.

இந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான (2017-18) தீண்டாமை கடைப்பிடிக்காத மத நல்லிணக்கத்துடன் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாழும் சிறந்த சமுதாய நல்லிணக்க கிராமமாக வேளானூர் கிராமம் தேர்வு செய்யப்பட்டது.

பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கும் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் கோயில் திருவிழாக்கள், குடிநீர் மற்றும் நீர்நிலைகளை உபயோகப் படுத்தலில் வேறுபாடுகள் இன்றி அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதை ஊக்கப்படுத்தும் விதமாக வேளானூர் கிராமத்துக்கு ஊக்கப் பரிசு தொகையாக ரூ.10 லட்சத்துக்கான காசோலை மாவட்ட ஆட்சியர் நடராஜனால் வழங்கப்பட்டது.

வேளானூர் கிராம ஊராட்சி தனி அலுவலரிடம் வழங்கப்பட்ட இந்தத் தொகையைக் கொண்டு வேளானூர் கிராமத்துக்குத் தேவையான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பள்ளிக்கட்டட மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட முகமையின் திட்ட இயக்குநர் ஹென்சி லீமா அமாலினி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுஜிபிரமிளா ஆகியோர் உடனிருந்தனர்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES