சென்னை: சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த வருடத்திற்கான சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.
சென்னையில் இந்த வருடம் நடக்கும் 15-வது சர்வதேசத் திரைப்பட விழாவில் 150 படங்கள் திரையிடப்பட உள்ளன. ஆறு பிரிவுகளின் கீழ் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன. கலைவாணர் அரங்கில் இன்று மாலை ஆறு மணிக்கு சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவிழா நடைபெறுகிறது.
கோவா, கேரளா, மும்பை, கொல்கத்தா, டெல்லி என புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் பல இருந்தாலும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை பெரும்பாலான ரசிகர்கள் ஆண்டுதோறும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இன்று மாலை ஆறு மணிக்கு கலைவாணர் அரங்கில் துவக்க விழா நடைபெறுகிறது. இதில் சினிமா பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். என்.எஃப்.டி.சி மற்றும் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் இணைந்து வழங்கும் இந்த விழாவில் 150 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
இந்த திரைப்பட விழாவில் ஆஸ்திரேலியா, பிரெஞ்சு, ஸ்வீடன், ஐரோப்பா, கொரியா உள்ளிட்ட நாடுகளின் பல படங்கள் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் நடித்த இரண்டு படங்களும் திரையிடப்படுகின்றன.
சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா ஆகிய தியேட்டர்களிலும் தாகூர் பிலிம் சென்டர், ரஷ்ய கலாச்சார மையம் ஆகிய இடங்களிலும் படங்கள் திரையிடப்படும். திரையிடும் இடங்கள் அருகருகே இருப்பதால், சினிமா ஆர்வலர்களுக்கு இந்த முறை அலைச்சல் இருக்காது.
தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் 'அறம்', 'மாநகரம்', 'மாவீரன் கிட்டு', 'தரமணி', 'துப்பறிவாளன்', 'குரங்கு பொம்மை' உள்ளிட்ட 22 படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் படங்களில் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படும் 12 படங்கள் இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன.
8 நாட்கள் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் பங்கேற்க கேசினோ தியேட்டரில் 800 ரூபாய் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். உதவி இயக்குநர்கள், மாணவர்கள், மூத்த குடிமக்களுக்குப் பதிவு கட்டணம் 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.