சென்னை: கொளத்தூர் நகைக்கடை கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குடும்பத்தை விட வேலைதான் முக்கியம் என்று கருதுவார் என்று இன்ஸ்பெக்டரின் மனைவி கண்ணீருடன் கூறியுள்ளார். கொளத்தூர் புதிய லட்சுமி புரத்தில் முகேஷ் குமார் என்பாரின் நகைக்கடையில் கடந்த நவம்பர் 16ல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. மாடிக் கடையை வாடகைக்கு எடுத்த கொள்ளையர் மேல்புறத்தை ஓட்டை போட்டு 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனர்.
இந்த நகைக் கடை கொள்ளை தொடர்பாக ஏற்கனவே சென்ராம் , கேலாராம், சங்கர்லால், தவ்ராம் கைது செய்யப்பட்டனர்.சென்ராமின் மகன் நாதுராம், தினேஷ் சவுத்ரியை பிடிக்க ராஜஸ்தானுக்கு 6 பேர் கொண்ட தனிப்படை போலீசார் சென்றிருந்தனர். இன்று காலையில் பாலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்களுடன் நடந்த சண்டையில் மதுரவாயல் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியப்பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். கொளத்தூர் சட்ட ஒழுங்கு ஆய்வாளர் முனிசேகர் என்பவரும் படுகாயம் அடைந்தார். 3 போலீசார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதனையடுத்து அம்பத்தூர் இணை ஆணையர் சந்தோஷ் ராஜஸ்தான் விரைந்துள்ளார்.
இதனிடையே இன்று சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் இன்று பெரியபாண்டியன் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பெரியபாண்டியின் மனைவி, தினசரியும் செல்போனில் பேசுவார். பயப்படாம இரு என்று சொன்னார். தினசரியும் என்னை எழுப்பி விடுவார். குடும்பத்தை விட வேலைதான் அவருக்கு ரொம்ப முக்கியம். குடும்பம் இரண்டாம்பட்சம்தான். தினசரியும் எழுப்பி விடுவார். இன்று அவரிடம் இருந்து போன் வரவில்லை என்பதால் நான் உறங்கிவிட்டேன். என் உறவினர்தான் டிவியில் செய்தியை பார்த்து விட்டு போன் செய்தார். கூட நிறைய போலீசார் போயிருந்தால் இப்படி நடந்திருக்காது என்று கூறி அழுதார்.
பெரியபாண்டிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஒரு மகன் கல்லூரியில் முதலாண்டு படித்து வருகிறார். மற்றொருவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது தந்தையுடன் கடைசியாக இரு தினங்களுக்கு முன்பு பேசியதாகவும் அப்போது கூட பிசியாக இருப்பதாக கூறியதாகவும் தெரிவித்தார். நானும் போலீஸ் ஆசைப்பட்டேன் ஆனால் அப்பா வேண்டாம் என்று கூறி விட்டார். குடும்பதோடு சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுத்ததில்லை என்று கூறினார் என்று கூறியுள்ளார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் மகன்.