புதுச்சேரி சாராயக் கடையை சூறையாடிய பெண்கள் படை!


புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வந்த சாராயக் கடையை பெண்கள் ஒன்று கூடி அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரியில் வெளிநாட்டு மதுக் கடைகளைப் போல சாராயக் கடைகளும் உள்ளன. தட்டாஞ்சாவடிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் என்ற இடத்தில் 6ம் எண் சாராயக் கடை உள்ளது. இந்தக் கடை இப்பகுதி பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக நீண்ட காலமாக மக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால் கடை அகற்றப்படவில்லை.

இந்த நிலையில் இன்று காலை ஒரு பெரும் பெண்கள் படையே திரண்டு கடைக்கு வந்தது.

வந்தவர்களில் பலரும் பெண்கள்தான். கடைக்குள் புகுந்த அவர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் தூக்கி போட்டு உடைத்தனர். சில பெண்கள் மேடை போல இருந்த பகுதியில் ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த சாராய பேரல்களை தூக்கிப் போட்டு டமார் என்று உடைத்தனர்.

தூக்க முடியாத பொருட்களை கீழே உருட்டி விட்டு கொட்டிக் கவிழ்த்தனர். ஒரு பெண் கையில் கிடைத்த சோடா பாட்டில்கள், குளிர்பானங்களை கேஸ் கேஸாக தூக்கிப் போட்டு உடைத்தார்.

சாராய கேன்கள், பாட்டில்கள், சைடு டிஷ் ஐட்டங்கள், வாட்டர் பாட்டில்கள் என எதுவும் சிக்கவில்லை. இதைப் பார்த்து குடிகாரர்களும், கடைக்காரர்களும் அலறி அடித்து ஓடினர். யாரும் எதிர்ப்புதெரிவிக்க முடியவில்லை. காரணம், அந்தப் பெண்கள் அவ்வளவு ஆவேசமாக இருந்தனர்.

இதுகுறித்து போராட்டம் நடத்திய பெண்களில் சிலர் கூறியபோது, புதுச்சேரியில் உள்ள அனைத்து சாராயக்கடைகளும் ஏலம் விடப்படும். இந்த சாராயக்கடை சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது இங்கு எதுவும் வீடுகளும் இல்லை. இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசலும் இல்லை.

இப்போது இந்தக் கடையில் அருகிலேயே பள்ளி, மருத்துவமனைகள் உட்பட ஏராளமான குடியிருப்புகளும் வந்துவிட்டது. இதனால் இங்கு குடித்துவிட்டு வரும் நபர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. குடித்துவிட்டு கண்மண் தெரியாமல் கடையில் இருந்து வேகமாக இருசக்கர வெளியில் வரும்போது மற்றவர்களும் விபத்துக்குள்ளாகிறார்கள். வாரத்திற்கு ஒருவர் இங்கு விபத்தில் இறக்கிறார்கள். நிறையபேர்களுக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருக்கிறது.

இங்கு வந்த பெண்களில் பலபேர் இந்தக் கடையில் குடித்து இறந்து போனவர்களின் மனைவிகள்தான். அதுமட்டுமல்லாமல் இந்தக் கடையின் வாசலில் இருக்கும் வாய்க்காலிலேயே குடித்துவிட்டு வந்து விழுந்து இறந்து விடுகிறார்கள். நான்கு நாட்கள் கழித்து நாறிப்போய்தான் அவர்களை வெளியே எடுக்க வேண்டியிருக்கிறது.

பலமுறை போராட்டம் செய்தும் அந்தக் கடையை மீண்டும் மீண்டும் மறு ஏலம் செய்வதிலேயே அரசு தீவிரம் காட்டி வருகிறது. இன்றும் இந்தக் கடைக்கு ஏலத்தை அறிவித்திருந்தது. அதனால்தான் நாங்களே களம் இறங்கி விட்டோம் என்றனர்.

பெண்கள் படை போல திரண்டு வந்து சாராயக் கடையை தூக்கிப் போட்டு மிதித்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES