குரு பெயர்ச்சி குருபகவானுக்கு லட்சார்ச்சனை...


பிரஹஸ்பதி என்று அழைக்கப்படும் குரு பகவான் தேவர்களுக்கு எல்லாம் தலைவன். ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகம் என்ற அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் குருதான். குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடப் பெயர்ச்சியடைகிறார். இந்த ஆண்டு வரும் ஜூலை 5ம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார் குரு பகவான்.

குருபகவான் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். நம் வாழ்வில் மிக முக்கியமானவை இரண்டு உள்ளது. தனம் என்று சொல்லக்கூடிய பணம், புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்க கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு. திருமணத்துக்கு மிக முக்கிய கிரகமாக குரு பகவான் திகழ்கிறார். குருபலம் வந்து விட்டதா என்று பார்த்த பிறகே திருமண விஷயங்களை ஆரம்பிக்கிறார்கள். குருவின் அருள் இருந்தால் ஞானம், கூர்ந்த மதிநுட்பம், அமைச்சர் யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்றவை துறைகளில் பிரகாசிக்கலாம். எனவேதான் குரு பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.

குரு எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் பலமும், விருத்தியும் அடைகிறது. குரு பார்வை சர்வ தோஷ நிவர்த்தி. குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.

குரு பெயர்ச்சி விழா வருகிற 5ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. ஜூலை5ம் தேதி இரவு குருபகவான் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைவதையொட்டி இக்கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் உத்தரவுபடி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் நலனை கருதி தகரத்தால் ஆன பந்தல் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. பக்தர்களின் நலன் கருதி கோவிலுக்குள்ளும், கோவிலை சுற்றியும் 20க்கும் மேற்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியும் நடைபெறுகிறது.

இக்கோவிலில் நடைபெறும் குரு பெயர்ச்சி முதல் கட்ட லட்சார்ச்சனை வருகிற 28ம் தேதியுடன் நிறைவடைகிறது. மீண்டும் குருப்பெயர்ச்சிக்கு பின் ஜூலை 9ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை குருபகவானுக்கு 2ம் கட்ட லட்சார்ச்சனை நடைபெறும்.

பாடி திருவல்லீஸ்வரர் கோவிலில், வரும், ஜூலை 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, லட்சார்ச்சனை நடக்க உள்ளது. காலை 7 மணி முதல், இரவு 9 மணி வரை லட்சார்ச்சனை நடக்க உள்ளது. மேலும், 6ம் தேதி, காலை குரு பரிகார ஹோமம் நடக்கிறது. லட்சார்ச்சனைக்கு 400 ரூபாயும், பரிகார ஹோமத்துக்கு 1,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு குருபகவான் கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு இடம்பெயர்கிறார். குரு பெயர்ச்சியால் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினருக்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும். அவற்றைத் தவிர்க்க இந்த பரிகாரத்தை மேற்கொண்டால் நிம்மதி பெறலாம் என்று ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES