இந்தியா பாகிஸ்தான் - விமர்சனம்


நடிகர்கள்: விஜய் ஆன்டனி, சுஷ்மா, பசுபதி, ஜெகன், எம்எஸ் பாஸ்கர், மனோபாலா

ஒளிப்பதிவு: என் ஓம்

இசை: தீனா தேவராஜன்

தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி

இயக்கம் என் ஆனந்த்

நான், சலீம் என இரு சீரியஸ் படங்களுக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடித்திருக்கும் முதல் காமெடிப் படம் இந்தியா பாகிஸ்தான். முதல் இரு படங்களைப் போலவே தனக்கான கதையைத் தேர்வு செய்ததில் வெற்றிப் பெற்றிருக்கிறார் விஜய் ஆன்டனி.

இரண்டரை மணி நேரம் குற்றம் குறைகளைக் கண்டுகொள்ளாமல் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

விஜய் ஆனந்தும் சுஷ்மாவும் வழக்கைத் தேடியலையும் வக்கீல்கள். ஒரு புதிய அலுவலகம் அமைக்க இடம் தேடி அலையும் இருவரும் புரோக்கர் ஜெகன் மூலம் ஒரு வீட்டைப் பிடித்து பாதி பாதியாகப் பிரித்துக் கொண்டு அலுவலகங்களை அமைக்கிறார்கள். அப்போதுதான் இருவருமே வக்கீல்கள் என்பதை ஒருவருக்கொருவர் தெரிந்து கொள்கிறார்கள். அங்கே ஆரம்பிக்கிறது முட்டலும் மோதலும். யாருக்கு முதலில் வழக்கு கிடைத்து வெற்றி பெறுகிறார்களோ, அவர்களுக்கே அந்த அலுவலகம் முழுசாக சொந்தம், மற்றவர் வெளியேறிவிட வேண்டும் என்பது பந்தயம்.

அப்போதுதான் பசுபதி - எம்எஸ் பாஸ்கரின் நிலப் பஞ்சாயத்து இந்த இருவரின் கைக்கும் வருகிறது. பசுபதிக்கு விஜய் ஆன்டனி வக்கீல். எம்எஸ் பாஸ்கருக்கு சுஷ்மா.

இருவரும் வழக்குக்காக மோதிக் கொள்ளும்போது, மெல்லியதாக காதல் பூக்கிறது. ஆனால் விஜய் ஆன்டனி சொதப்பிவிடுகிறார். மீண்டும் இருவருக்கும் மோதல். அப்போதுதான் ஒரு என்கவுன்டர் விவகாரம் இருவரையும் துரத்துகிறது. அதில் இவர்களின் க்ளையன்ட்களான பசுபதி, எம்எஸ் பாஸ்கர், அவர்களின் கோஷ்டிகளும் சிக்கிக் கொள்ள, எப்படி மீண்டார்கள், நாயகனும் நாயகியும் காதலில் சேர்ந்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

விஜய் ஆன்டனி நகைச்சுவையாக நடிக்க முயன்றிருக்கிறார். ஆனால் முழு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் அந்தக் குறையை ஜெகனும் மனோபாலாவும் பசுபதியும் எம்எஸ் பாஸ்கரும், ஆமக்குஞ்சு யோகி பாபுவும், காளியும் சரிகட்டுகிறார்கள். டூயட் காட்சிகளில் பரவாயில்லை. வசன உச்சரிப்பில் ரஜினி ஸ்டைலையே இதிலும் தொடர்கிறார்.

சுஷ்மா நல்ல அறிமுகம். தமிழில் ஒரு சுற்று வர வாய்ப்பிருக்கிறது. விஜய் ஆன்டனியிடம் காதல் வயப்பட்டுப் பேசும் அந்த இரண்டு நிமிடங்களில் பலே நடிப்பு. பசுபதி, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட நகைச்சுவைப் பட்டாளம் படத்தை ரொம்பவே லைவாக வைத்துக் கொள்கிறது.

ஓமின் ஒளிப்பதிவு ஓஹோ... ஆனால் அந்த ஓஹோவை தீனா தேவராஜின் இசைக்குப் போட முடியவில்லை. காமா சோமாவென பாடல் வரிகள் கடுப்பேற்றுகின்றன. முதல் பிரேமிலிருந்து கடைசி காட்சி வரை ரசிகர்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான் இயக்குநரின் ஒரே நோக்கம் என்பது காட்சிகளில் தெரிகிறது. அதே நேரம் சில காட்சிகள் சவசவவென்று சாதாரணமாகப் போகின்றன.

ஒரு நிலத்தகராறு நீதிமன்றப் படியேறினால் எப்படி ஆயுள் முழுக்க இழுத்தடிக்கும் என்பதை போகிற போக்கில் சொல்வது சிறப்பு. அந்த மால் சேஸிங்கும், க்ளைமாக்ஸும் பக்கா சுந்தர் சி பாணி. கலகலப்பாக நகர்கின்றன. அந்த சிடியை வைத்துக் கொண்டு படு புத்திசாலித்தனமாக ஏதோ ஒன்றை செய்யப் போகிறார்கள் என்று பார்த்தால்.. புஸ்ஸாகிவிடுகிறது.

முதல் படத்திலேயே மக்களைச் சிரிக்க வைப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஆனந். அதற்காகவே குறைகளைக் கண்டும்காணாமல் படத்தை ரசிக்கலாம்!


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES