ஜெ. வழக்கில் ஒரு வாரத்தில் அப்பீல்.. முதல்வர் பதவியை பறிக்க சொல்லும் கர்நாடக அரசு தரப்பு!


தமிழ் எஞ்சின்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் இன்னும் ஒரு வாரத்திற்குள் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது அரசு தரப்பு. ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி அந்தஸ்தில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரவும் அரசு தரப்பு முடிவு செய்துள்ளதாக கர்நாடக சட்ட அமைச்சகத்திடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை கர்நாடக ஹைகோர்ட் கடந்த மாதம் 11ம் தேதி அளித்த தீர்ப்பில் தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா குற்றம் செய்யவில்லை என்று ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடக அரசு முடிவு செய்தது. அமைச்சரவையும் இம்முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து மேல்முறையீட்டின்போது சுப்ரீம்கோர்ட்டில் ஆஜராக ஆச்சாரியா, சந்தேஷ் சவுட்டா ஆகிய மூத்த வழக்கறிஞர்களை கர்நாடக அரசு நியமித்தது.

இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் கோடை விடுமுறை முடிந்து வழக்கமான அலுவல்கள் ஜூலை முதல் வாரம் தொடங்க உள்ளன. எனவே, அவசரமாக மனு தாக்கல் செய்ய வேண்டாம் என்று ஆச்சாரியா டீம் முடிவு செய்து பொறுமையாக மேல்முறையீட்டு மனுவை தயாரித்து வந்தது. இந்த தயாரிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அடுத்த திங்கள்கிழமைக்குள் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: ஹைகோர்ட் தீர்ப்பிலுள்ள குளறுபடிகளை சுட்டிக் காட்டி, ஜெயலலிதாவை மக்கள் பிரதிநிதி என்ற அந்தஸ்தி்ல் இருந்து தகுதி நீக்கம் செய்ய கேட்க உள்ளோம். இந்த கோரிக்கை சுப்ரீம்கோர்ட்டால் ஏற்கப்பட்டால், ஜெயலலிதா முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டிவரும். மேலும், 27ம் தேதி நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும்.

மேலும், ஹைகோர்ட் தீர்ப்பை தள்ளுபடி செய்துவிட்டு, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் செல்லும் என்று கேட்க உள்ளோம். வழக்கு முடியும்வரையாவது ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை கேட்கப்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதேநேரம், இந்த வழக்கு ஆகஸ்ட் மாதத்தில்தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் வட்டாரம் தெரிவித்தது. எனவே, ஆர்.கே.நகர் தேர்தலில் இந்த வழக்கு உடனே பாதிப்பை ஏற்படுத்தாது என்றே தெரிகிறது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES