வாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள்! - லிங்குசாமி


தமிழ் எஞ்சின்
தனக்கு ரஜினி பெரிய உதவி செய்ததாக ரஜினி முருகன் பட விழாவில் இயக்குநர் லிங்குசாமி குறிப்பிட்டார். மேலும் சினிமாவில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள், அவர்களை கண்டு கொள்ளாவிட்டால் நம்மை காணாம அடிச்சிருவாங்க என்றும் குறிப்பிட்டார். திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படம் 'ரஜினிமுருகன்'. சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் ,சமுத்திரக்கனி நடித்துள்ளார்கள். பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை தாஜ் கொரமண்டல் ஓட்டலில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், "கும்கி' படத்தை 'மைனா' படம் வெற்றி பெறும் முன்பே ஒப்பந்தம் செய்து விட்டோம். விளம்பரம் பார்த்தே நம்பிக்கை வந்தது. அதுபோலத்தான் இந்த படத்தையும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வெளிவரும் முன்பே பேசி ஒப்பந்தம் செய்து விட்டோம். ரஜினி முருகன் படத்தின் கதை திரையரங்க மூடில் ஜாலியாக இருந்தது. வாழ்க்கையில் நிறைய உத்தம வில்லன்கள் வருவார்கள். அவர்களை இனம் கண்டு கொள்ளவில்லையென்றால், நம்மள காணாம அடிச்சிருவாங்க. நீங்கள் இதே மனசோட இருங்கள் என்று பொன் பொன்ராமைக் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு எவ்வளவோ பிரச்சினை இருக்கலாம். எல்லாவற்றையும் சந்தித்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். காலையில் மெரினா பீச் போனேன். ரஜினி முருகன் பற்றி எந்த நினைப்பும் இல்லாமல்தான் போனேன். வழியில் தென்பட்ட 'ரஜினிமுருகன்' போஸ்டர்கள் பெரிய தெம்பாக புத்துணர்ச்சியைத் தந்தன. அதைப் பார்த்ததும் எனக்கு கஷ்டம் இருப்பது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது எனத் தோன்றியது. என் படம் 'ரன்' படப்பிடிப்பு சமயம் ரஜினி சாரின் 'பாபா'வும் நடந்தது முதன்முதலில் அப்போதுதான் எடிட்டிங்கில் ரஜினி சாரைப் பார்த்தேன். அப்போது 'ரன்' போஸ்டர்களை பார்த்து இருக்கிறார். 'செம எனர்ஜியாக இருக்கிறது' என்று கூறினார். 'ரஜினி முருகன்' தலைப்பு பற்றி யோசித்தேன். ரஜினிகாந்த் என்று ரஜினி சார் பெயரில் தலைப்புக்கு அவர் யாருக்கும் அனுமதி தந்ததில்லை. சிவாஜி என்கிற தலைப்புக்கு இதே ரஜினி சார் சிவாஜி குடும்பத்தில் அனுமதி வாங்கினார். 'ரஜினி முருகன்' தலைப்பு சம்பந்தமாக ரஜினிசாரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்ட போது ரஜினி சார் போனில் வந்தார். நான் சொன்னேன் இந்த தலைப்பு பொன்ராமின் குரு ராஜேஷ் இயக்கிய 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் வரும் ஒரு பாத்திரம். எதிர்மறையாக எதுவும் பயன்படுத்த வில்லை என்று விரிவாகப் பேச ஆரம்பித்தேன் போதும் போதும் என்று என்னைப் பேசவே விடவில்லை. போனிலேயே ஓகே சொல்லி விட்டடார்.

இது மிகப்பெரிய உதவி. அவருக்கு மிகப்பெரிய மனசு. அது மட்டுமல்ல ஏற்கெனவே தலைப்பு பற்றிய வழக்கு ஏதோ இருக்கு. சௌந்தர்யாகிட்டே கேட்டு க்ளியர் பண்ணிக் குங்க என்றும் சொன்னார். எனக்காக இந்த தலைப்பை விட்டுக் கொடுத்த ரஜினிசாருக்கு பெரிய நன்றி சினிமாவே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. ஊரிலிருந்து இங்கு நான் வந்தபோது என்ன கொண்டு வந்தேன்.? நம்பிக்கையை மட்டும்தான் எடுத்துக்கொண்டு வந்தேன். வேறு என்ன அள்ளிக் கொண்டு வந்தேன்? உதவி இயக்குநராக சென்னையிலிருந்து நான் ஊருக்குப் போகும் போதெல்லாம் நான் மதிக்கும் உறவினரை வைத்து என்னிடம் சமரசம் பேசி மனதை மாற்றுவார்கள். சினிமாவில் லட்சம் பேர் வருகிறார்கள். ஒருவன்தான் ஜெயிக்கிறான் உன்னால் முடியுமா என்பார்கள். அப்போது அந்த ஒருவன் நான்தான் என்பேன். நான் சினிமாதான் என்பதில் உறுதியாக இருந்தேன்; நம்பிக்கையாக இருந்தேன்; பிடிவாதமாக இருந்தேன் ஒருநாள் குடும்ப ஜோதிடர் என்று ஒருவர் வந்தார். அவர் சொன்னார்.. 'உன்னால் சினிமாவில் ஒரு பிரேம் கூட எடுக்க முடியாது என்று. அவர் சொன்ன மூன்றாவது மாதத்தில் 'ஆனந்தம்' படப்பிடிப்பு தொடங்கி விட்டேன். இன்றைக்கு நாலு படங்கள் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் சினிமாவில் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். நான் ஒவ்வொரு தடவையும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறேன். இது என் முதல் பாதி. செகன்ட் ஹாஃப் இனிமேல்தான்.

எனவே படம் பிரச்சினை பற்றிக் கவலை இல்லை. 'வழக்கு எண் ' பட சமயத்தில் வாய்ப்பு கேட்டவர்தான் இந்த சிவகார்த்திகேயன். அந்த 'வழக்குஎண் ' பட இயக்குநர் பாலாஜி சக்திவேல் அடுத்த படம் எடுப்பதற்குள் சிவகார்த்திகேயன் நடித்து எட்டாவது படத்துக்கு வந்து விட்டார். இவர் இன்னமும் வளர்வார். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம், 'ரஜினி முருகன்' படப்பிடிப்பை நடத்துங்கள் என்றேன். முடித்தேவிட்டார்கள். 'ரஜினி முருகன்' குறித்த நேரத்தில் வெளியாகும். என் சொத்துக்களை விற்றாவது இந்தப் படத்தை வெளியிட்டுவிடுவேன். 'சண்டக்கோழி 2 'விரைவில் எடுப்போம். ராஜ்கிரண் நடிப்பார். இமான்தான் இசை அமைப்பார்," என்றார்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES