புதுவையில் ஏலம் விடப்படும் தமிழக சிறுமிகள்... ஒரு ஷாக் ரிப்போர்ட்!


தமிழ் எஞ்சின்
சென்னை : கேரளா மட்டுமின்றி வீட்டு வேலைக்காக தமிழக சிறுமிகளை, ஏஜெண்டுகள் மூலம் ஆந்திரா மற்றும் புதுவைக்கும் ஏலம் விட்டு விலைக்கு வாங்கிச் செல்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் இருந்து சிறுமியரை வீட்டு வேலைக்காக அழைத்துச் சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி தமிழக தலைமை செயலர் மற்றும் டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்கத் தலைவர் கிளாரா பிட்சை கூறுகையில், ‘தமிழகத்தின் பின் தங்கிய மாவட்டமான, விழுப்புரத்தில் இருந்து 10 - 15 வயது சிறுமியரை வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்கின்றனர்.

சிறுமிகளின் அழகு மற்றும் சூட்டிகை ஆகியவற்றின் அடிப்படையில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை ஏலத்தில் எடுக்கின்றனர். இந்த செயல், 2005ல் எங்கள் கவனத்துக்கு வந்தது. நாங்கள் எடுத்த மீட்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கையால், இந்த எண்ணிக்கை தற்போது 400 ஆக குறைந்துள்ளது.

விழுப்புரம் மட்டும் அல்லாமல், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்தும் ஆந்திராவுக்கு, சிறுமியரை வீட்டு வேலைக்கு என அழைத்துச் செல்கின்றனர். ஆனால், இதுகுறித்த புள்ளி விவரம் முழுமையாக இல்லை. வீட்டு வேலைக்கு செல்லும் சிறுமியர், காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை வேலை வாங்கப்படுகின்றனர். பல நேரங்களில், பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்தப் படுகின்றனர். சிகரெட்டில் சூடு வைப்பது, அடிப்பது போன்ற வன்முறை செயல்களும் நடக்கின்றன.

கேரளாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு சிறுமியர், புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு சிறுமி என மூன்று பேர் வேலை செய்யும் வீட்டில் இறந்துள்ளனர். இதனை மூடி மறைக்க கட்டப்பஞ்சாயத்து செய்து பிரச்னையை பெரிதாக்காமல் மறைத்து விடுகின்றனர். இறப்பு குறித்து வழக்குத் தொடர, கேரளாவுக்குச் சென்று போராட்டம் நடத்தியும் பலன் கிடைக்கவில்லை.தேசிய மனித உரிமை ஆணையம் தற்போது, நடவடிக்கை எடுத்துள்ளது. இது, முதல்படி. இன்னும் பல துாரம் செல்ல வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வீட்டு வேலைகளுக்கு சிறுமிகளை அழைத்துச் செல்ல ஏஜண்டுகள் பலர் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் உள்ளனர். இவர்கள் கூறும் ஆசை வார்த்தையில் மயங்கி, பெண் குழந்தைகளைப் பெற்றோர் வீட்டு வேலைக்காக அனுப்பி விடுகின்றனராம்.

சிறுவர்களை கட்டுப்பாட்டில் வைப்பது சிரமம் என்பதால், சிறுமியரை அழைத்துச் செல்வதில் தான் ஏஜெண்டுகள் அதிக ஆர்வம் காட்டுகிறார்களாம். மேலும், சிறுமிகள் அதிகம் எதிர்த்துப் பேச மாட்டார்கள் என்பதும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற திட்டமும் முக்கிய காரணங்கள் என அவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு வீட்டு வேலைக்கு செல்லும் சிறுமிகள் மர்மமான முறையில் இறக்கும் சம்பவங்களும் அதிகம் என கூறும் தொண்டு நிறுவனங்கள், அத்தகைய சமயங்களில் இந்த விவகாரம் பூதாகரமாகாத வகையில் கட்டப் பஞ்சாயத்து மூலம் தீர்க்கப் படுவதாகக் கூறுகின்றனர்.

ஏஜெண்டுகள் மூலம் பலியான சிறுமியின் குடும்பத்தாருக்கு ஒரு லட்ச ரூபாய் பணம் வாங்கிக் கொடுக்கப் படுவதாக கூறப்படுகிறது. வயிற்றுப் பிழைப்பிற்காக மகளை கண்காணா தேசத்திற்கு அனுப்பும் பெற்றோரும், இதை எதிர்த்துப் பேச திராணி இல்லாமல் வாய் மூடி காசை பெற்றுச் செல்வது தான் கொடுமையிலும் கொடுமை.

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் கிராமம் கிராமமாகச் சென்று வீட்டு வேலை செய்யும் சிறுமிகள் குறித்து சமூக ஆர்வலர்கள் கணக்கெடுத்து வருகின்றனராம். பல வீடுகளில், உண்மையை சொல்ல மறுக்கின்றனர். சிலர் தகவல் தந்தாலும், பிரச்னை செய்ய வேண்டாம் எனக் கூறுவதாக சமூக ஆர்வலர் குபேந்திரன் கூறுகிறார்.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES