சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு


தமிழ் எஞ்சின்
‘சில்க் ஸ்மிதா’ என்று அழைக்கப்படும் விஜயலட்சுமி, ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழில் நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற திரைப்படத்தில், ‘சிலுக்கு’ என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், தென்னிந்திய திரையுலகின் ‘கனவு கன்னியாக’ திகழ்ந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 17 வருடங்கள் இந்திய சினிமாத் துறையில் முத்திரைப் பதித்த அவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் சினிமா பயணத்தை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: டிசம்பர் 02, 1960

பிறப்பிடம்: ஏலூரு, ஆந்திரபிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்பட நடிகை

இறப்பு: செப்டம்பர் 23, 1996

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘விஜயலட்சுமி’ என்ற இயற்பெயர்கொண்ட அவர், 1960  ஆம் ஆண்டு டிசம்பர் 02  தேதி இந்தியாவின் ஆந்திரபிரதேசம் மாநிலத்திலுள்ள “ஏலூரு” என்ற இடத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

இவருடைய குடும்பம் ஏழ்மையில் இருந்ததால், தன்னுடைய பள்ளிப்படிப்பை வறுமையின் காரணமாக நான்காம் வகுப்போடு நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. இளமையில் இவருடைய வசீகரத் தோற்றத்தினால் பலருடைய தொல்லைக்கு ஆளானார். இதனால், இவருடைய பெற்றோர்கள் இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் முடித்துவைத்தனர். பிறகு குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சேர்ந்த அவர், அங்கு உறவினர் வீட்டில் தங்கி வேலைத்தேடினார்.

திரைப்பட வாழ்க்கை

திரைப்படத் துறையில் ஒரு ஒப்பனைக் கலைஞராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய ‘விஜயலட்சுமி’, தமிழ் திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி அவர்களால் “வண்டிச்சக்கரம்” என்ற தமிழ் திரைப்படத்தில் சிலுக்கு என்கின்ற சாராயக்கடையில் பணிபுரியும் பெண் கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடித்தார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்த அவர், தமிழ் திரைப்படத்துறையில் புகழையும் தேடிக்கொண்டார். அன்று வரை ‘விஜயலட்சுமி’ எனப்பட்ட இவர், இத்திரைப்படத்திற்கு பிறகு, ‘சில்க் ஸ்மிதா’ என்ற பெயரில் அழைக்கப்பட்டார். பிறகு 1979 ஆம் ஆண்டு “இணையே தேடி” என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்பட உலகில் அறிமுகமானார். தன்னுடைய முதல் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவாக இறுதிவரை அவருக்கு ஒரே மாதிரியான காதாபாத்திரங்கள் மட்டுமே தேடிவந்தது. கவர்ச்சியானத் தோற்றத்தாலும், நடனத்தாலும் அனைவரையும் ஈர்த்த அவர், தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப்படங்களில் நடித்து, தென்னிந்தியத் திரைப்பட உலகின் ‘கனவுக்கன்னியாக’ வலம்வந்தார்.

வெற்றிப் பயணம்

‘மூன்று முகம்’, ‘அமரன்’, ‘சகலகலா வல்லவன்’, போன்ற திரைப்படங்களில் இவருடைய வசீகரமான தோற்றத்தினாலும், கவர்ச்சிகரமான நடனத்தினாலும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் கவர்ச்சிப்புயலாக வலம்வந்தார். இவர் நடிப்பில் பல கதாபத்திரத்தினை ஏற்று நடித்திருந்தாலும், நாளிதழ்களும், திரைப்படங்களும் கவர்ச்சி நடிகையாகவே அடையாளப்படுத்தின. இருப்பினும், ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘நீங்கள் கேட்டவை’, ‘தாலாட்டு கேட்குதம்மா’, ‘மூன்றாம் பிறை’, ‘லயனம்’ போன்ற திரைப்படங்களின் மூலம் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி தனக்குக் கவர்ச்சி மட்டுமின்றி, அனைத்து விதமான நடிப்பின் பரிணாமங்களும் வரும் என்பதனை நிரூபித்தார்.

அவரின் சில குறிப்பிடத்தக்கத் திரைப்படங்கள்

‘வண்டிச்சக்கரம்’ (தமிழ் 1979), ‘இணையே தேடி’ (மலையாளம் 1979), ‘அலைகள் ஓய்வதில்லை’ (தமிழ் 1981),  ‘சீதகொக சிலுக’ (தெலுங்கு 1981), ‘எமகின்கருது’ (தெலுங்கு 1982), ‘மூன்றாம் பிறை’ (தமிழ் 1982), ‘சகலகலா வல்லவன்’ (தமிழ் 1982), ‘பட்டணத்து ராஜாக்கள்’ (தமிழ் 1982), ‘தீர்ப்பு’ (தமிழ் 1982), ‘தனிக்காட்டு ராஜா’ (தமிழ் 1982), ‘ரங்கா’ (தமிழ் 1982), ‘சிவந்த கண்கள்’ (தமிழ் 1982), ‘பார்வையின் மறுபக்கம்’ (தமிழ் 1982), ‘மூன்று முகம்’ (தமிழ் 1983), ‘பாயும் புலி’ (தமிழ் 1983), ‘துடிக்கும் கரங்கள்’ (தமிழ் 1983), ‘சத்யா’ (தமிழ் 1983), ‘தாய்வீடு’ (தமிழ் 1983), ‘பிரதிக்னா’ (மலையாளம் 1983), ‘தங்கமகன்’ (தமிழ் 1983), ‘கைதி’ (தெலுங்கு 1983), ‘ஜீத் ஹமாரி’ (இந்தி 1983), ‘ஜானி தோஸ்த்’ (இந்தி 1983), ‘ஆட்டக்கலசம்’ (மலையாளம் 1983), ‘ஈட்டப்புளி’ (மலையாளம் 1983), ‘சில்க் சில்க் சில்க்’ (தமிழ் 1983), ‘சூரக்கோட்டை சிங்கக்குட்டி’ (தமிழ் 1983), ‘குடசாரி நம்பர் ஒன்’ (தெலுங்கு 1983), ‘ரோஷகாடு’ (தெலுங்கு 1983), ‘சேலஞ்ச்’ (தெலுங்கு 1984), ‘ருஸ்தும்’ (தெலுங்கு 1984), ‘நீங்கள் கேட்டவை’ (தமிழ் 1984), ‘வாழ்க்கை’ (தமிழ் 1984), ‘பிரசண்ட குள்ள’ (கன்னடம் 1984), ‘ஓட்டயம்’ (மலையாளம் 1985), ‘ரிவேஞ்ச்’ (மலையாளம் 1985), ‘சட்டம்தோ போராட்டம்’ (தெலுங்கு 1985), ‘லயனம்’ (மலையாளம் 1989), ‘அதர்வம்’ (மலையாளம் 1989), ‘பிக் பாக்கெட்’ (தமிழ் 1989), ‘அவசர போலிஸ்’ 100 (தமிழ் 1990), ‘சண்டே 7PM’ (மலையாளம் 1990),  ‘ஆதித்யா 369’ (தெலுங்கு 1991), ‘தாலாட்டு கேட்குதம்மா’ (தமிழ் 1991), ‘இதயம்’ (தமிழ் 1991), ‘நாடோடி’ (மலையாளம் 1992), ‘ஹள்ளி மேஷ்ற்று’ (கன்னடம் 1992), ‘அந்தம்’ (தெலுங்கு 1992), ‘சபாஷ் பாபு’ (தமிழ் 1993), ‘மாஃபியா’ (மலையாளம் 1993), ‘உள்ளே வெளியே’ (தமிழ் 1993), ‘அளிமைய’ (கன்னடம் 1993), ‘முட மேஸ்திரி’ (தெலுங்கு 1993), ‘ஒரு வசந்த கீதம்’ (தமிழ் 1994), ‘விஜய்பாத்’ (இந்தி 1994), ‘மரோ கூட் இந்தியா’ (இந்தி 1994), ‘ஸ்படிகம்’ (மலையாளம் 1995), ‘தும்போலி கடப்புரம்’ (மலையாளம் 1995), ‘லக்கி மேன்’ (தமிழ் 1996), ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ (தமிழ் 1996).

இறப்பு

சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் சுமார் 450 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி தன்னுடைய 35 வது வயதில் சென்னையில் அவருடைய வீட்டிலேயே தூக்குப் போட்டு இறந்தார். காதல் தோல்வி என மேலும் பல சூழ்நிலைகள் இவருடைய இறப்பிற்குக் காரணமாக சொல்லப்படுகிறது.

இவருடைய மறைவிற்குப் பிறகு “தி டர்டி பிக்சர்” என்ற பெயரில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, மிலன் லூத்ரியா இயக்கத்தில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில், அவரது கேரக்டரில் வித்யா பாலன் நடித்திருப்பார். 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் பல மொழிகளில் மொழிமாற்றமும் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்தகையை சிறப்புமிக்க சில்க் ஸ்மிதாவின் அபார நடனத்திறமையும், கண்களின் வசீகரமும் தமிழ் திரையுலகை மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல மொழித் திரைப்பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டுச்சென்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க இயலாது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES