இனிமே இப்படித்தான் - விமர்சனம்


தமிழ் எஞ்சின்
நடிகர்கள்: சந்தானம், ஆஸ்னா சவேரி, அகிலா கிஷோர், விடிவி கணேஷ், தம்பி ராமய்யா, நரேன் ஒளிப்பதிவு: கோபி ஜெகதீஸ்வரன் இசை: சந்தோஷ் தயாநிதி தயாரிப்பு: சந்தானம் இயக்கம்: முருகானந்த்

பொதுவாக காமெடி நடிகர்கள் ஹீரோக்களாகும் போது, ஒரு பட அதிசயம் மாதிரி, முதல் படம் ஓடும்... அடுத்தடுத்த படங்கள் ஆளைக் காணாமலடித்துவிடும். ஆனால் சந்தானம் கொஞ்சம் விதிவிலக்கு போலிருக்கிறது. கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போன்ற படங்களில் ஓரளவு வெற்றியை ருசித்தவருக்கு, இனிமே இப்படித்தான் இன்னும் பெரிய வெற்றியாக அமைந்துள்ளது.

இனிமே நான் இப்படித்தான் என்று தைரியமாக காமெடி ஹீரோவாக அவர் தொடரலாம். கதை அப்படியொன்றும் புதியதல்ல. வேலையேதும் இல்லாமல் அப்பாவிடம் திட்டு வாங்கிக் கொண்டு, அம்மாவின் செல்லப் பிள்ளையாக ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் சந்தானத்துக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என ஜோசியர் கூறிவிடுகிறார். பெண் பார்க்கும் படலம் தொடங்குகிறது. எந்தப் பெண்ணும் செட்டாகவில்லை. நண்பர்கள் ஆலோசனையின்படி, அழகான பெண்ணாகப் பார்த்து காதலித்து திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுக்கிறார்.

ஊரெல்லாம் தேடி, ஆஸ்னா சவேரியைக் குறி வைக்கிறார். விழுந்து விழுந்து காதலிக்கிறார். ஆனால் ஆஸ்னா பக்கமிருந்து கிரீன் சிக்னல் இல்லை. இன்னொரு பக்கம் பெற்றோர் அகிலா கிஷோரைப் பார்த்து நிச்சயித்து விடுகின்றனர். நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் ஆஸ்னா காதலுக்கு சம்மதிக்க, அங்கே ஆரம்பிக்கிறது சந்தானத்துக்கு சோதனை. நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் உண்மையைச் சொல்ல முயலும்போதெல்லாம் ஒரு தடங்கள்... கடைசியில் காதலியைக் கைப்பிடித்தாரா... நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்தாரா? என்பதை நிச்சயம் திரையில் பாருங்கள்.

இரண்டரை மணி நேரம்... சிரித்துக் கொண்டே ஒரு படத்தைப் பார்க்க முடியும் என்றால், இனிமேல் இப்படித்தானை தைரியமாகப் பரிந்துரைக்கலாம். சந்தானம் தன்னை காமெடியன் இமேஜிலிருந்து முற்றாக வெளியேற்றிக்கொள்ள பெரும் முயற்சி எடுத்திருப்பது படத்தில் தெரிகிறது. உடல் மொழியில் ஒரு நாயகனாக அவர் ஜெயித்திருக்கிறார். நடனம், சண்டை, ரொமான்டிக் டூயட் என அனைத்திலுமே பக்கா. அதேநேரம், முன்னிலும் பலமடங்கு காமெடியை ரசிகனுக்கு விருந்தாகத் தரவும் அவர் தவறவில்லை.

உணவக கழிப்பறையில் லொள்ளு மனோகரும் சந்தானமும் பண்ணும் களேபரத்தில் அரங்கமே அதிர்கிறது என்றால் மிகையல்ல. காதலியாக வரும் ஆஸ்னா சவேரி, நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக வரும் அகிலா கிஷோர் இருவருமே கவர்கிறார்கள். அகிலா கிஷோர் இன்னொரு நயன்தாரா மாதிரிதான் தெரிகிறார் இந்தப் படத்தில். சந்தானத்துக்கு லவ் ஐடியாக்கள் கொடுக்கும் 'துருப்பிடிச்ச தொண்டைக்காரன்' விடிவி கணேஷ், 'மூக்குக்குப் பாலீஷ் போடும்' தம்பி ராமைய்யா, ஒரே ஒரு காட்சியில் வந்து சாமியாடிவிட்டுப் போகும் சிங்கமுத்து, மிலிட்டெரிக்காரராக வரும் பெப்சி விஜயன், டென்சன் அப்பா ஆடுகளம் நரேன், 'டைல்ஸ் பதிச்ச தலையன்' கூல் சுரேஷ்.. என நடித்த அத்தனை பேருமே ரசிக்க வைக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதியின் இசை கவனிக்க வைக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு இன்னொரு ப்ளஸ். முருகன் - பிரேம் ஆனந்த் என்ற இரட்டையர் முருகானந்த் என்ற பெயரில் இயக்கியிருக்கிறார்கள். முதல் முயற்சியே வெற்றியில் முடிந்திருக்கிறது. இனிமே இப்படியே தொடருங்கள்!


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES