கே. ஜே. யேசுதாஸ் வாழ்க்கை வரலாறு


தமிழ் எஞ்சின்
கே.ஜே. யேசுதாஸ் அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் சிறந்த கர்நாடக இசை கலைஞரும் ஆவார். தனது கந்தர்வக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், இசை ரசிகர்களால் “கான கந்தர்வன்” என அழைக்கப்படுகிறார். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள இவருக்கு, இந்திய அரசின் உயரிய விருதான “பத்ம பூஷன்” மற்றும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்பட்டது. மேலும், எந்தப் பாடகரும் சாதிக்காத நிலையில், ஏழு முறை “தேசிய விருதுகளையும்”, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அற்புதமான தெய்வீகக் குரலால் இசையுலகில் புகழ்பெற்று விளங்கும் கே.ஜே. யேசுதாஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: ஜனவரி 10, 1940

இடம்: கொச்சி, கேரளா மாநிலம், இந்தியா

பணி: கர்நாடக இசைக் கலைஞர், பாடகர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு:

கட்டசேரி யோசப் யேசுதாஸ் என்ற இயற்பெயர் கொண்ட கே. ஜே. யேசுதாஸ் அவர்கள், 1940 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “கொச்சி” என்ற இடத்தில் ஆகஸ்டைன் யோசப்புக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக லத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை மலையாள செவ்விசைக் கலைஞர் மற்றும் நடிகரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:

ஐந்து வயதிலேயே பாடும் திறமையை வளர்த்துக்கொண்ட யேசுதாஸ் அவர்களுக்கு, இசையின் ஆரம்பப் பாடல்களை அவருடைய தந்தை கற்றுக் கொடுத்தார். தன்னுடைய தந்தையிடமே இசைப் பயிற்சிப்பெற்று வளர்ந்த அவர், பிறகு ஆர்.எல்.வி. மியூசிக் அகாடமியில் இசைப் பயிற்சிப்பெற்றார். உயர் கல்விக்காக திருவனந்தபுரத்திலுள்ள சுவாதித்திருநாள் இசைக்கல்லூரியில் சேர்ந்த யேசுதாஸ் அவர்கள், நிதிப் பற்றாக்குறையால் பாதியிலேயே வெளியேறினார். ஆனால், அக்கல்லூரியில் பயின்ற கொஞ்ச காலத்தில் செம்மங்குடி சீனிவாச ஐயர் மற்றும் செம்மை வைத்தியநாத பாகவதர் போன்ற புகழ்பெற்ற ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார்.

திரைப்படத்துறையில் யேசுதாஸின் பயணம்:

1960 ஆம் ஆண்டு தன்னுடைய திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய யேசுதாஸ் அவர்கள், கே. எஸ். ஆண்டனி இயக்கத்தில் வெளிவந்த “கால்ப்பாடுகள்” என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் பாடலைப் பாடினார். அந்தப் பாடல் அவருக்கு ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற்று தந்ததோடு மட்டுமல்லாமல், மேலும் பல திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் பெற்றுத் தந்தது. வெகு விரைவில், தமிழ் திரைப்படத் துறையில் கால்பதித்த அவர், 1964 ஆம் ஆண்டு எஸ். பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த “பொம்மை” என்ற திரைப்படத்தில் முதன் முதலாக “நீயும் பொம்மை நானும் பொம்மை” என்ற பாடல் மூலம் தமிழில் அறிமுகமானார். பிறகு 1970ல் இந்தித் திரைப்படத்துறையில் “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” திரைப்படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். ஆனால், அவர் பாடி வெளிவந்த முதல் படம், இந்திப் படமான “சோட்டி சி பாத்” என்பதாகும். அதனைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, வங்காளம், ஒரியா, சமஸ்கிருதம், துளு, மலாய் உருசிய மொழி, அரேபிய மொழி, லத்தீன், ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனைப் படைத்தார். இதைத்தவிர, சமயப் பாடல்களையும், பிற மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.

வெற்றிப் பயணம்:

1972 ஆம் ஆண்டு கே. எஸ். சேதுமாதேவன் இயக்கத்தில் வெளிவந்த ‘அச்சனும் பப்பையும்’ (மலையாளம்) என்ற திரைப்படத்தில் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்காக இவருக்கு, சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்காக ‘தேசிய விருது’ வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டே ‘காயத்ரி’ (மலையாளம்) என்ற திரைப்படத்தில் ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்காக ‘தேசிய விருதை’ வென்றார். அதைத் தொடர்ந்து, 1976ல் ‘சிட்சோர்’ (இந்தி) திரைப்படத்தில் “பாஷி கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘மேகசந்தேசம்’ (தெலுங்கு) திரைப்படத்தில் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும், 1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ (மலையாளம்) திரைப்படத்தில் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் பாரதம் (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் ‘தேசிய விருதினை’ வென்று சாதனைப் படைத்தார்.

தமிழ்த் திரைப்படத்துறையில் யேசுதாஸ்:

தொடக்கத்தில் ஒரு சில பாடல்களைத் தமிழ் திரைப்படங்களில் பாடியிருந்தாலும், 1974 ஆம் ஆண்டு, ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் “விழியே கதையெழுது” என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. பிறகு எம். ஜி. ஆர் நடித்த “பல்லாண்டு வாழ்க” திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடி, தமிழ் ரசிகர்களை தன் வசப்படுத்தினார். அதில் “போய் வா நதியலையே” மற்றும் “ஒன்றே குலமென்று பாடுவோம்” பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தது எனலாம். மேலும் ‘நீதிக்கு தலைவணங்கு’ திரைப்படத்தில், “இந்த பச்சைக்கிளிகொரு”, ‘டாக்டர் சிவா’ திரைப்படத்தில் “மலரே குறிஞ்சி மலரே”, ‘அவள் ஒரு தொடர்கதை’ திரைப்படத்தில் “தெய்வம் தந்த வீடு” பாடல்கள் யேசுதாஸை தமிழில் மிகவும் பிரபலமாக்கியது.

‘தண்ணித் தொட்டி தேடிவந்த கன்னுக்குட்டி நான்’, ‘நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்’, ‘பூவே செம்பூவே’, ‘தென்பாண்டி தமிழே’, ‘ஆராரிரோ பாடியதாரோ’, ‘தென்றல் வந்து என்னைத் தொடும்’, ‘பூங்காற்று புதிதானது’, ‘ராஜ ராஜ சோழன் நான்’, ‘செந்தாலும் பூவில்’, ‘கல்யாண தேன்நிலா’, ‘அதிசய ராகம்’ போன்ற பாடல்கள் இன்றளவும் இசை ரசிகர்கள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இல்லற வாழ்க்கை:

யேசுதாஸ் அவர்கள், பிரபா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ‘வினோத், விஜய் மற்றும் விஷால்’ என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகனான விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பாடகராக விளங்கி வருகிறார்.

விருதுகளும், மரியாதைகளும்:

1975 – “பத்ம ஸ்ரீ” விருது.

அண்ணாமலை பல்கலைக்கழகம்(1989), கேரளா பல்கலைக்கழகம்(2003), மகாத்மா காந்தி பல்கலைக்கழகம்(2009) மூலமாக ‘கௌரவ டாக்டர் பட்டம்’.

1992 – இசைப்பேரரிஞர் விருது.

1992 – சங்கீத் நாடக அகாடமி விருது.

2002 – “பத்ம பூஷன்” விருது.

2003 – வாழ்நாள் சாதனையாளருக்கான ஃபிலிம்பேர் விருது.

1972ல் ‘மனுஷ்யன் மதங்களே’ என்ற பாடலுக்கும், ‘பத்மதீர்த்தமே உணரு’ என்ற பாடலுக்கும், 1976ல் கொரி தேரா காவோன் படா” பாடலுக்கும், 1982ல் ‘ஆகாச தேசனா ஆஷதா மாசனா’ என்ற பாடலுக்கும், 1987ல் ‘உன்னிகேலே ஒரு கதா பறையம்’ என்ற பாடலுக்கும், 1991ல் ‘பாரதம்’ (மலையாளம்) திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும், 1993ல் ‘சோபனம்’ திரைப்படத்தில் அனைத்துப் பாடல்களுக்கும் ‘தேசிய விருதினை’ வென்றார்.

இதைத் தவிர, நாற்பதுக்கும் மேற்பட்ட கேரளா, தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில விருதுகளையும், ஃபிலிம்பேர் விருதுகளையும், வனிதா திரைப்பட விருதுகளையும், மேலும் ‘சங்கீத சிகரம்’, ‘சங்கீத சக்ரவர்த்தி’, ‘சங்கீத ராஜா’, ‘சங்கீத ரத்னா’, ‘கான கந்தர்வா’ என எண்ணிலடங்கா விருதுகளை வென்று சாதனைப் படைத்தார். ‘மொழிகளுக்கும், எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது இசை மட்டுமே! அந்த வகையில் யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் ஒலித்த அத்தனைப் பாடல்களும், என்றென்றும் இசை ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.


Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS
Advertise Now!

LATEST TOPICS UPDATES